இந்தியா

“இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலினை தலைவராக்கலாம்...!”

Staff Writer

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக்கலாம் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் நாளிதழின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்த கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களை சந்திக்கும்போது சலசலப்பு ஏற்பட்டு, கூட்டணியில் இருந்து விலகி வருகின்றன.

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகுவதாக அறிவித்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

மேலும், பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த கூட்டணிக்கு தலைவராக மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ’சாம்னா’வின் இன்றைய தலையங்கத்தில் இந்தியா கூட்டணி விவகாரம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

அதில், ”இந்தியா கூட்டணியில் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை கலைத்து, ஒரு தலைவரின் கீழ் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தலைவராக மு.க.ஸ்டாலினோ, மமதா பானர்ஜியோ அல்லது வேறு யாரேனும் விரைவில் பொறுப்பேற்பது அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.