காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இருபது ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்த இந்தத் திட்டத்தை, தற்போது நடைமுறைக்குக் கொண்டுவருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக 200 கோடி பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.10 நோட்டுகளும் ரூ. 20 நோட்டுகளும் தலா 100 கோடி அச்சிட உள்ளதாக நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி மக்களவையில் தெரிவித்தார்.
மேலும், காகிதம், பாலிமர் ஆகியவற்றினால் தயாராகும் இரு வகை நோட்டுகளும் ஒன்றாகவே புழக்கத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக தேய்மானத்தைத் தாங்கும் என்பதால், நீண்ட ஆயுளுடன் இருப்பதுடன் அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து, பிளாஸ்டிக் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்த பிறகே, இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.