பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா உட்பட்ட நாடுகளை இந்தியா முந்தும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், நிதிச்சந்தைகளின் எதிர்கால நிலவரங்களை முன்கூட்டியே கணித்து, உலகப் பொருளாதார அவுட்லுக் என்ற அறிக்கையை, ஆண்டுக்கு இரு முறை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும்.
இந்நிலையில், தாய்லாந்தில் இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற மாநாட்டில், உலகப் பொருளாதார அவுட்லுக் அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இதில், கடந்த 2025ஆம் ஆண்டு, 3.5%ஆக இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 3.1%ஆக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வரும் 2027ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார வளர்ச்சி 3.4%ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோ, உலகளாவிய பணவீக்கம் நடப்பு ஆண்டில் 4.7%ஆக இருக்கும் நிலையில், வரும் 2027ஆம் ஆண்டு 4.1%ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான 95% பங்களிப்பை, 32 நாடுகள் மட்டுமே வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, உலகின் மிக வேகமாக வளரும் முக்கியமான பொருளாதாரமாக இந்தியா திகழும் என்றும் கணித்துள்ளது.
அமெரிக்கா, சீனா உட்பட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, முறையே 2.3%, 4.5%ஆக இருக்கும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7%ஆக கடந்த ஆண்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டிலும், வரும் 2027ஆம் ஆண்டிலும் சற்றே குறைந்து 7%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.