இந்தியன் ஆயில் நிறுவனம் 
இந்தியா

30 ஆண்டுகளாகப் போராடி ரூ.12 லட்சம் இழப்பீடு பெற்ற 63 வயது பெண்!

Staff Writer

பெண் என்ற காரணத்திற்காக பணி மறுக்கப்பட்டவருக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ. 12 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எல்.பி.ஜி. எரிவாயு நிரப்பும் ஆலையில் உதவியாளர் பணிக்காக அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.

கல்வித் தகுதி, அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்திருந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதிப் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெறவில்லை. பெண் என்பதால் அந்த வேலை அவருக்கு மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு, சுமித்ரா வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நீதிமன்றம் தொழிலாளர் அல்லாத வேறு பணியை சுமித்ராவிற்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டது.

ஹரியானா உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணித்தன்மை, பணிச்சூழல், அசாதாரணமான பணிநேரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் பெண் என்பதால் இந்தப் பணிக்கு அவர் பொருத்தமானவராக கருதப்படவில்லை என்று நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

வழக்கறிஞரின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஒரு பெண் என்பதால் அவரது பணி நியமனத்தை மறுத்துள்ளது பெண்மைக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்றும், இந்த வழக்கு 30 ஆண்டுகள் தாமதமானதைக் கருத்தில் கொண்டும், மனுதாரர் சுமித்ரா ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், இந்தியன் ஆயில் நிறுவனம் அவருக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram