குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் பி.பி.சி. நடத்திய ஆய்வில், இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விளம்பரங்கள், வீடியோக்கள், சட்டவிரோத உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தும் கட்டண விளம்பரங்கள் உட்பட்டவை இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
சில விளம்பரங்கள் பயனர்களை டெலிகிராம், வாட்சாப் போன்ற தளங்களுக்கு வழிநடத்தி, அங்கும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் பகிரப்பட்டு வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும், அது தொடர்பான உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்க உத்தரவிட்டது.
இத்தகைய விளம்பரங்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன, அவற்றைத் தடுக்க உள்ள பாதுகாப்பு நடைமுறைகள், இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து 7 நாள்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பதில் அளிக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம், போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மெட்டா நிறுவனம், "குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களுக்கு எங்கள் தளத்தில் சகிப்புத்தன்மையற்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. பி.பி.சி சுட்டிக்காட்டிய விளம்பரங்களும் கணக்குகளும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்க, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், குற்றவாளிகள் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்ற முயன்று வருகின்றனர்." என்று தெரிவித்துள்ளது.