ஜூலை 15 முதல் புதிய இணையதளத்தை ஐஆர்டிசி தொடங்குகிறது. 
இந்தியா

ரயில் டிக்கெட் முன்பதிவு பண்ணனுமா?ஜூலை 15 முதல் புதிய இணையதளம்!

நிமிடத்துக்கு ஒன்றரை லட்சம் டிக்கெட் பதிவு செய்யுமாம்

Staff Writer

வரும் ஜூலை 15 முதல் புதிய இணையதளத்தை தொடங்குவதாக இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வாக பல முன்னேற்றங்களுடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் இரயில்வே டிக்கெட் முன்பதிவு வழக்கம் 2002ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 88% இரயில்வே முன்பதிவுகள் ஆன்லைன் மூலமாக கையாளப்பட்டு வருகின்றன.

பழைய பயணிகள் முன்பதிவு முறையை விட 10 மடங்கு திறன் வாய்ந்ததாக புதிய முன்பதிவு முறை இருக்கும் என்று இரயில்வே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பழைய முறையில் நிமிடத்திற்கு 36,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால், புதிய முன்பதிவில் நிமிடத்திற்கு 1,50,000த்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யும் வகையில் தயார் செய்யப்படுகிறது.

இந்த புதிய இணையதளத்தில் டிக்கெட் விசாரணைத் திறனும் 10 மடங்கு அதிகரித்து காணப்படும். மேலும், பல்வேறு மொழிகளில் இதன் சேவை இயங்கும் என்றும், முன்பதிவின்போதே பயணியருக்கு தேவையான இருக்கைகளை தேர்ந்தெடுக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது பயணங்களை எளிதாக திட்டமிடும் வகையில், கட்டண அட்டவணையை இதில் காண முடியும். இதன் மூலம் வெவ்வேறு தேதிகளில் முன்பதிவிற்கான கட்டணங்களை காண முடியும்.

இரயில் சேவைகளை சுலபமாக்க, கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவின் துணையுடன் செயல்படும் இரயில் ஒன் என்ற செயலியை இரயில்வே துறை அறிமுகப்படுத்தியது.

என்னமோ செய்யுங்க... ஆனா தட்கல் டிக்கெட் எடுக்கறத மட்டும் சந்திரமண்டலத்துக்கு டிக்கெட் எடுக்கறமாதிரி சிக்கல் பண்ணாம இருந்தா வரவேற்கலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram