இஸ்ரோ தனியார்மயம் ஆக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு விளக்கம் கேட்டு அதன் 9 ஊழியர் சங்கங்கள் இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு கடிதம் எழுதியிருந்தன.
”இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு எனப்படும் இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு, ஏவுதளச் செயல்பாடுகள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதைத் தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று இஸ்ரோ ஊழியர்கள் கூட்டமைப்பு அக்கடிதத்தில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் அளித்துள்ள விளக்கம்:
"இஸ்ரோவைத் தனியார்மயமாக்க அல்லது அதன் பங்குகளைக் குறைக்க முயற்சி நடப்பதாக பரவிவரும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை. இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயம் ஆக்கப்படாது என்பதில் இஸ்ரோ திட்டவட்டமாக உள்ளது.
விண்வெளியில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு அனுமதி வழங்குவதால், இஸ்ரோவின் பங்கு ஒருபோதும் குறையாது.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும் என்பதற்காக கடந்த 2023ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக் கொள்கையின் அடிப்படையில் தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இஸ்ரோவின் முக்கியத்துவம் குறையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று இஸ்ரோ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.