முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) என்ற தலைப்பில் மாதந்தோறும் கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் வானொலியில் வாயிலாக உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று (பிப். 22) 131-வது எபிசோடில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் மகத்தான தலைவர் என புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர். அவருடனான நட்பு பசுமரத்தாணி போல எனது நெஞ்சில் இடம்பெற்றிருக்கிறது.
ஜெயலலிதா ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் இருக்கும், பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார் ஜெயலலிதா.
பிப். 24 ஆம் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட, நான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது, தமிழக மக்கள் ஜெயலலிதா மீது வைத்திருக்கும் பற்றை நான் உணர்ந்திருக்கிறேன். ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது மக்களிடம் ஒரு புத்துணர்வைப் பார்க்க முடிகிறது.
குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோதெல்லாம் எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜெயலலிதா. நான் முதல்வராக இருந்தபோது குஜராத்துக்கு பல உதவிகளை செய்தார். அவர் நாட்டின் மீதும் பெரிய பற்றுக் கொண்டிருந்தார்” என்றார்.
தமிழ்நாடில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைப் புகழ்ந்து பிரதமர் மோடி, மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.