இடைநீக்கம் செய்யப்பட்ட பிரமோத் குமார் 
இந்தியா

ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற மேலும் ஓர் ஊழியர் இடைநீக்கம்! – கர்நாடக அரசு அதிரடி

Staff Writer

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது கர்நாடக மாநில அரசு. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், அரசு ஊழியர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

அரசின் உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். கடந்த வாரம் கிராம பஞ்சாயத்து ஊழியரான பிரவீன் குமார் என்பர் இடைநீக்கம் செய்யப்பட்டர்.

அந்த வகையில், பிதர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள ஆண்கள் விடுதியில், ஒப்பந்த உதவி சமையல்காரராகப் பணியாற்றிவந்த பிரமோத் குமார் என்பவர் அக்.21ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ககன் பூலே அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரமோத் குமார் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதோடு, இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

இது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பிரமோத் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் உட்பட அனைத்து அமைப்புகளும் பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கர்நாடக அரசு சமீபத்தில் கொண்டுவந்த நிலையில், தொடர்ச்சியான இடைநீக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.