அரவிந்த் கெஜ்ரிவால் - மணீஷ் சிசோடியா 
இந்தியா

மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு விடுதலை… சிபிஐக்கு குட்டு…!

Staff Writer

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் தனியார் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இதற்காகப் பெறப்பட்ட முறைகேடான பணம் கோவா சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தன.

இந்த வழக்கின் காரணமாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் அவர் முதலமைச்சர் பதவியில் நீடித்தது டெல்லி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல், மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த ரூஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடரவோ அல்லது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவோ தேவையான அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

நீதிபதி தனது உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் சதித்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்த வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் கண்கலங்கிபடியே பேட்டி அளித்தார். “கடின உழைப்பின் மூலமும் நேர்மையின் மூலமாகவே மக்கள் நம்பிக்கையைச் சம்பாதித்ததற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத் தீர்ப்பு தான் நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும். அரசியலமைப்பைக் கேலிப்பொருளாக்க வேண்டாம். ஊழல், வேலையின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக ஏன் முயல்கிறது” என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தொடர்ந்த பணப்பரிவர்த்தனை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.