பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு செலவினமாக ரூ.7,84,678 கோடியை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 6,81,210 கோடியைவிட 1,03,468 ரூபாய் கூடுதல் ஆகும்.
கடந்த ஏப்ரலில் காஷ்மீரின் பெகல்காம் பயங்கரத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான ஆப்பரேசன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையை அடுத்த முதல் நிதிநிலை அறிக்கை இது.
பட்ஜெட் ஆவணத்தின்படி, இராணுவத்துக்கான மொத்த மூலதனச் செலவு ரூ.2,19,306 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்துக்கான ரூ.1,71,338 கோடி ரூபாய் உட்பட 5,53,668 கோடி ரூபாய் வருவாய்ச் செலவினமாக ஒதுக்கப்படுகிறது.
இராணுவச் செலவினம் கூடுதலாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால், இராணுவத் தயார்நிலை, நவீனமயமாக்கம், பணியாளர் நலன் ஆகியவற்றுக்கு மைய அரசு கவனமளிப்பது உறுதியாகிறது.
மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை போர் விமானங்கள், விமான எந்திரங்களுக்கு ரூ. 63,733 கோடி ஒதுக்கப்படுகிறது. கடற்படைக்கு ரூ.25,023 கோடி ஒதுக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் இராணுவத்துக்கான ஒதுக்கீட்டில், மூலதனச் செலவினம் 1.8 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. திருத்திய மதிப்பீட்டில் அது ரூ.1,86,454 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.