இந்தியா

பழைய தளபதியை மீண்டும் எதிர்கொள்ளும் மமதா பானர்ஜி!

Staff Writer

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கும் தமிழகப் பேரவைத் தேர்தலுடன் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த மாதக் கடைசியில் இரு கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு  வருகின்றன. 

இடதுசாரி முன்னணி நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 192 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. அதில், 27 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, இன்று, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கோர்க்காலாந்து பகுதிக்கான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தவிர, 291 வேட்பாளர்களையும் மமதா பானர்ஜி அறிவித்தார். 

அவர் இப்போதைய பவானிபூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை சிங்கூர் தொகுதியில் மமதாவைத் தோற்கடித்த பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் சுவேந்து அதிகாரி சிங்கூரிலும் பவானிபூரிலும் போட்டியிடுகிறார். 

தன் முன்னாள் தளபதியான சுவேந்துவிடம் தோற்றுப்போன மமதா, பவானிபூரில் இடைத்தேர்தல் வரச்செய்து அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

இந்த முறை பவானிபூர் தொகுதி இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. 

நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்பு கேட்டு மமதா போட்டியிடுகிறார்.