சில மனிதர்கள் அவ்வபோது விநோதமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. திருமண விஷயத்தில் இப்படிப்பட்ட விநோத முயற்சிகளில் ஈடுபடுவோரைப் பார்க்கலாம். ஆன்லைனில் திருமணம், பொம்மையுடன் திருமணம், தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் திருமணம், தன்னைத்தானே திருமணம் என உலகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் வருகின்றன.
இந்த வரிசையில், உத்தரப்பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிவித்து, திருமணம் செய்து கொண்டுள்ளார் இளம் பெண் ஒருவர்.
உத்தர பிரதேச மாநிலம் படாவுடன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்து வைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளார் அவரது தந்தை சுரேஷ் சந்திர சர்மா.
இந்த நிலையில், கிருஷ்ணரின் தீவிர பக்தையான பிங்கி சர்மா, மூன்று மாதங்களுக்கு முன்னர் விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றுள்ளார். அதன் பிறகு தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் இதனால் கிருஷ்ணரே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு குடும்பத்தினர் முதலில் இணங்க மறுத்தாலும் பிறகு சம்மதித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.