இந்தியா

35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்!

Staff Writer

உத்தர பிரதேசத்தில், 35 வயது பெண்ணை திருமணம் செய்த 75 வயது முதியவர், மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம், குச்மச் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்ரு ராம் (75). விவசாயியான இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்தார்.

தனியாக வசித்து வந்த சங்ரு ரம், உ.பி.யின் ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த மன்பாவதி என்ற 35 வயது பெண்ணை மறுமணம் செய்ய முடிவு செய்தார்.

இதற்கு, சங்ரு ராமின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அதை பொருட்படுத்தாமல் அப்பெண்ணை அவர் கடந்த மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்தார். இதைத்தொடர்ந்து திருமணத்தை பதிவு செய்தார்.

திருமணம் நடந்த அன்றைய தினம் இரவு, வீட்டுப் பொறுப்புகளை கவனித்து கொள்வது உட்பட, தங்கள் வாழ்க்கையை பற்றி இருவரும் நீண்டநேரம் உரையாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் காலை, சங்ரு ராமின் உடல்நிலை திடீரென பாதிப்புக்குள்ளானது. உடனே, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், சங்ரு ராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிலர், சங்ரு ராமின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால், சங்ரு ராமின் இறுதிச்சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.