நீதிமன்றம் தீர்ப்பு 
இந்தியா

படிவம் 6 -இல் பயப்படாம கையெழுத்துப் போடுங்க... நீதிமன்றம் பாத்துக்கும்!

Staff Writer

வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் பதிவு செய்திருந்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருந்தால், பயமின்றி படிவம் 6-ஐத் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்ப்பவர்கள் மட்டுமே படிவம் 6-ஐத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருக்கும் முதல்முறை வாக்காளர் அல்லாதவர்கள் மீண்டும் படிவம் 6-ஐத் தாக்கல் செய்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைத் தெளிவுபடுத்துமாறு தில்லி உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இது தேவையற்ற அச்சம் என்றும், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருப்பவர்கள் படிவம் 6-ஐ பயமின்றி தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தது.

மேலும், முந்தைய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், சிறப்பு வாக்காளர் பதிவின்போதோ அல்லது அதற்குப் பிறகோ படிவம் 6-ஐச் சமர்ப்பித்துள்ளார் என்பதால் மட்டுமே அவர்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் வாக்குப் பதிவு அதிகாரி மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

இருப்பினும், வேறு எந்த நாடளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியிலும் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அனைத்து மாநில, யூனியன் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதியது.

அதில், ”படிவம் 6-ல் உள்ள அறிவிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 முதல் இருக்கிறது. வேறு தொகுதிகளில் வாக்காளராகப் பதிந்துள்ளவர்கள் மீதுதான் நடவடிக்கை வரும். ஒரே தொகுதியில் ஏற்கெனவே பதிந்து, பட்டியலில் இடமில்லாதவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாநில, யூனியன் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், உரிய வாக்காளர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram