ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

“அமெரிக்கா, இஸ்ரேலை எதிர்க்க தயங்கும் மோடி..!”

Staff Writer

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலையில் ஒன்றிய அரசு மெளனம் காப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த மாதம் 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனமாக இருக்கிறார். வெளியுறவுத்துறையும் அமைதி காக்கிறது. நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு கூட இல்லை.

மேற்கு ஆசிய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை சரியாக கண்டித்த மோடி அரசு, ஈரானின் உச்சத் தலைவரை படுகொலை செய்தது குறித்தும், ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் முற்றிலும் அமைதியாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்கும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் ஈரானும் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 2024ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது துக்கம் அனுசரித்த மோடி அரசு இப்போது தயங்குவது ஏன்? அமெரிக்க, இஸ்ரேலிய நண்பர்களை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்கவே ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுகிறது.” என்று ஜெய்ராம் ராமேஷ் விமர்சித்துள்ளார்.