தெஹல்கா பத்திரிகை நிறுவனர் தருண் தேஜ்பால், பெண் பத்திரிகையாளர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தெஹல்கா இதழ் நிகழ்ச்சியின்போது, அதன் நிறுவனர்களின் ஒருவரான தருண் தேஜ்பால், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுடன், தன்னைத் தாக்கியதாகவும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார்.
இதனால், தருண் தேஜ்பாலைக் கைதுசெய்த போலீசார் 7 மாதங்கள் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் தருண் தேஜ்பாலுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பார்க்கும்போது, இந்த சம்பவத்தால் அந்தப் பெண் பத்திரிகையாளர் அதிர்ச்சியடைந்ததாக தெரியவில்லை என்று கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு தருண் தேஜ்பாலை விடுதலை செய்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கோவா அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாகத் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இன்று ஆஜரான தருண் தேஜ்பால் தனக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரையும் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கோவா செஷன்ஸ் நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்தது.
மேலும் தருண் தேஜ்பாலை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.