ஆந்திரப்பிரதேசத்தில் முரசுப் புயல் காரணமாக ரூ.1,919 கோடி சேதமடைந்துள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான முரசுப் புயல், கடந்த நவம்பர் 3ஆம் தேதி, ஆந்திராவின் ஓங்கோல், நெல்லூர் - நர்சாபூர் இடையே புயல் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திராவில் பலத்த சேதம் ஏற்பட்டது.
சேதத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் ரூ. 1,919 கோடி சேதமடைந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
புயலால் 1,86,063 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் 1,43,122 ஹெக்டர் அளவில் இருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காய்கறிகள், பழங்கள், பூக்கள், மருத்துவத் தாவரங்கள், அலங்காரச் செடிகள் போன்ற தோட்டக்கலை பயிர் வகைகளும் சேதமாகியுள்ளன. 6,749 ஹெக்டர் பரப்பளவில் இருந்த தோட்டக்கலை பயிர்களின் சேதத்தால் 12,586 தோட்டக்கலை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள 983 வீடுகள், 346 படகுகள், 220 மீன்பிடி வலைகளும் சேதமடைந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.