கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நீட் டாப்பர் பன்ஷூல் பன்சல்  
இந்தியா

'ஏன் போராடணும்? அந்த நேரத்தில் படிக்கலாமே?': நீட் டாப்பர் பன்ஷூல் பன்சல் !

Staff Writer

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நடப்பு ஆண்டின் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் மாணவர்களிடம், "போராட்டம் செய்யாதீர்கள். போய் படியுங்கள்." என்கிறார் நீட் டாப்பர் பன்ஷூல் பன்சல்.

நடப்பு ஆண்டின் நீட் மறுதேர்வில், 99.99% உடன் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர் பன்ஷூல் பன்சல்.

நிகழாண்டின் நீட் தேர்வு ரத்தாகி, மறுதேர்வு அறிவித்தப் பின்னர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமல், அவரின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக கூறினார்.

முதலில் 706 மதிப்பெண்கள் பெற்ற அவர், மறுதேர்வில் 715 மதிப்பெண்கள் பெற்றார்.

என்.டி.டி.விக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, "எதற்காக நான் போராட வேண்டும்? மாறாக, வீட்டில் இருந்து படித்தால், என்னுடைய திறன்கள், மதிப்பெண்கள் மேம்படும்.

நீட் தேர்வு ரத்தானதும் முதலில் வருத்தமாக இருந்தது. பின்னர், என் வருத்தத்தை விலக்கிவிட்டு, தேர்வுக்கு தயாராக தொடங்கினேன்.

முன்னர் எடுத்த மதிப்பெண்களைவிட அதிகமாக எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் படிக்கத் தொடங்கினேன்.

தேர்வு ரத்தானதும், என்னுடைய தினசரி செயல்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எதிர்மறையான எண்ணங்களை விலக்கிவிட்டு, நேர்மறையான எண்ணங்களை மட்டும் நினைவில்கொண்டு என்னுடைய இலக்கை நோக்கி பயணித்தேன்." என்று கூறிய பன்சல், தேர்வு முடிந்தவுடன் அது உருவாக்கிய பதட்டம், மனஅழுத்தமும் மறைந்துவிடும் என்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram