நிர்மலா சீதாராமன் 
இந்தியா

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் பொதுமக்களைப் பாதிக்காதாமே... நிர்மலா சீதாராமன் சொல்றாங்க

Staff Writer

அன்றாட தேவைகளுக்காக யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது நுகர்வோர் கட்டணம் செலுத்த தேவையிருக்காது. கட்டணம் வணிகர்களே செலுத்தவேண்டி இருக்கும் என என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வங்கிகளின் இணையதளத்தின் மூலம் செய்யப்படும் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப். டி. ஆகிய பணப்பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், யு.பி.ஐ. போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு தற்போது கட்டணம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

இனி, யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடன் அட்டை போன்றவற்றைப் பயன்படுத்துகையில் வணிகநிறுவனங்கள் செலுத்தும் எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம் எனப்படும் சிறு கட்டணம் இனி யுபிஐ பயன்பாட்டின்போதும் அறிமுகப்படுத்த அரசுக்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

இதைதொடர்ந்து, இந்த கட்டண விதிப்புமுறை குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகின.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூகஊடகப் பதிவில் கூறியதாவது:

“யுபிஐ பணப்பரிவர்த்தனையை பயன்படுத்தும் மக்கள் இனி அதிகமான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசு பரிசீலித்துவரும் எம்.டி.ஆர். சுமை பொதுமக்கள் மீதுதான் விழும். எனவே, யுபிஐ நிதி கட்டமைப்பை வலுப்படுத்தத்தான் எம்.டி.ஆர். பரிசீலிக்கப்படுகிறது என்ற மத்திய அரசின் கூற்று தவறானது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது சமூக ஊடகப்பக்கத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள கருத்து:

“காங்கிரஸ் தலைவர்கள் வதந்திகளை பரப்புவதற்கு முன்னர் சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எம்.டி.ஆர். என்பது நுகர்வோருக்கானது அல்ல; வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இது நடைமுறைக்கு வருவதால், இதன்மூலம் வங்கிகள் தங்கள் கட்டமைப்பை வலுப்படுத்தமுடியும். அதில் கூடுதல் முதலீடு செய்யமுடியும். இதனால் நுகர்வோர் அதிக பலனடைவார்கள்.

இன்னும் இந்த எம் டி ஆர் விதிப்பது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. இது நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும். உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் இதை அங்கே விவாதித்திருக்கமுடியும்” என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram