உச்சநீதிமன்றத்தைப் போலவே போலி இணையதளத்தை உருவாக்கி டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க 'ஆபரேஷன் சக்ரா-VI' மூலம் 16 மாநிலங்களில், 80 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
இந்தப் போலி இணையதளத்தைப் பயன்படுத்திய சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளனர்.
இதுதொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 60 குழுக்கள் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக சென்னையைச் சேர்ந்த பி. நரேஷ், கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சிப் சாஹா ஆகியோரை இந்த அமைப்பு கைது செய்துள்ளது.
இவர்கள் போலியான நிறுவனங்களை உருவாக்கியும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட பணப் பரிவர்த்தணைகளுக்காக பொய்யான வங்கிக்கணக்குகளையும் உருவாக்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி, டிஜிட்டல் கைது என்ற பெயரில் பலரை ஏமாற்றி ரூ.2 கோடி மதிப்பிலான பணத்தை சட்டவிரோதமாக பரிமாறியுள்ளனர் என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளைக் கண்டறிந்து, குற்றங்களைத் தடுக்க 'ஆபரேஷன் சக்ரா-VI' மூலம் 60 சிறப்புக் குழுக்களை சிபிஐ உருவாக்கியுள்ளது.