பாஸ்போர்ட் 
இந்தியா

பாஸ்போர்ட்டை குடியுரிமைக்கான சான்றாக ஏற்க முடியாது: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

Staff Writer

பாஸ்போர்ட் என்பது சர்வதேச பயணத்திற்கும், வெளிநாட்டில் நம்மை அடையாளப்படுத்தவும் பயன்படும் ஒன்றுதான்; அதைக் குடியுரிமைக்கான சான்றாக ஏற்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் பாஸ்போர்ட் சேவைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

பாஸ்போர்ட்டின் செயலாக்கங்கள் ஐந்து வேலை நாள்களுக்குள் முடிக்கப்படுவதாகவும், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களில் தற்போது 45 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள், மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றால்தான் சாத்தியம் ஆகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதும் 545 பாஸ்போர்ட் சேவை மையங்கள் இருக்கின்றன. 2027-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு பாஸ்போர்ட் சேவை மையமாவது இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில், இந்த ஆண்டு கூடுதலாக 20 கடவுச்சீட்டு சேவை மையங்களைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

"இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் உள்ளது. இதை அதிகரிப்பதே நம் அரசின் நோக்கம்.” என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.