மணிசங்கர் அய்யர் - பினராயி விஜயன் 
இந்தியா

பினராயி விஜயன் தான் மீண்டும் முதல்வர் – மணிசங்கர் அய்யர் கருத்து!

Staff Writer

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் மாநில திட்டமிடல் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மணிசங்கர் அய்யர், பினராயி விஜயன் தலைமையிலான அரசை பாராட்டிய அதே சமயத்தில் தனது சொந்த கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

கேரளத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றன.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணிசங்கர் அய்யர் பேசியது கேரள அரசியலில் விவாதத்தை தூண்டியுள்ளது.

மணிசங்கர் அய்யர் பேசியதாவது:

”பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நாட்டுக்கே தலைமையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையை வேறு எந்த மாநிலத்தையும்விட கேரளம் திறம்பட நிறைவேற்றி வருகிறது.

நடைமுறைச் செயலாக்கத்தில் கேரளம் முதலிடத்தில் இருந்தாலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது. பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை ஆதரிப்பதில் காங்கிரஸ் கைவிட்ட பொறுப்பை முதல்வர் ஏற்க வேண்டும். ஏழைகளுக்கான தேசம், வளர்ச்சியில் தீர்க்கமான குரலைக் கொண்டு மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கிய ஒரே மாநிலம் மார்க்சிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்கும் கேரளம்” எனத் தெரிவித்தார்.