கேரள அரசின்மீது அமித் ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, ”கேரளத்தில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததது. அதேநாளில், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 9 குழுக்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டன.
ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மீண்டும் முன்னெச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. ஜூலை 26ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், ‘20 செ.மீ.க்கும் மேல் கனமழை பெய்யக் கூடும்; நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் புதையுண்டு உயிரிழக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தோம். முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும், கேரள அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.” என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் கூறியதாவது, ``இந்திய வானிலை மையம் அறிவித்த மழையின் அளவைவிட அதிகன மழையே பெய்தது. அதுமட்டுமின்றி, பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, காலை 6 மணியளவில்தான் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 282 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். அதேபோல், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.