பீகார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது என ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில், ''தேர்தலுக்கு முன்னதாக, பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது.
இதற்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தினார். இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தப்பட்டது. இது பொது பணத்தை தவறாக பயன்படுத்தும் முயற்சியாகும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்'' என பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இது குறித்து, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது. தேர்தலுக்கான முன்பாக, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்து.
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக இருக்கிறது. அரசு கஜானா காலியாக உள்ளது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள். உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி செலவிடப்பட்டு இருக்கிறது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.