காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் 60 ஆண்டுகளில் 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அந்த கட்சி அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து வேட்டையாடியது என்று மக்களவையில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மக்களவையில் கடந்த 2 நாட்களாக சிறப்பு விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஜன நாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது. என்ன பரிகாரம் செய்தாலும் அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸின் பாவம் மறையாது.
1951ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டத்தில் பிரதமர் நேரு முதல் திருத்தம் மேற்கொண்டார். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் 60 ஆண்டுகளில் 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அந்த கட்சி அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து வேட்டையாடியது. 1975இல் இந்திரா காந்தி மட்டும் 39 முறை திருத்தங்கள் செய்தார்.
கடந்த 1971இல் உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவை எடுத்தது. அப்போது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றத்தின் முடிவு மாற்றப்பட்டது. நீதிமன்றங்களின் சிறகுகள் வெட்டப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் ஷா பானு வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மா சிதைக்கப்பட்டது. விவாகரத்துக்கு பிறகு முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டு என்று ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்படாமல் சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பையே ராஜீவ் காந்தி மாற்றினார்.
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்பதில் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சி, வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த முயற்சி செய்கிறது. இது எஸ்சி. எஸ்டி. ஓபிசி பிரிவினருக்கு இழைக்கப்படும் அநீதி.
மத அடிப்படையிலான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றுதான் அம்பேத்கர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தி வருகிறது. இதன்படி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸை பொருத்தவரை அரசியலமைப்பு சட்டத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைந்து வருகிறது. அதை ஆயுதமாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
மோடி முன்மொழிந்த 11 தீர்மானங்கள்
* அரசும், குடிமக்களும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
* ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
* நாட்டின் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ள வேண்டும்.
* அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.
* வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும்.
* அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
* மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட கூடாது.
* பெண்கள் வளர்ச்சியில் உலகுக்கே முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
* மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.
* ’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற இலக்குடன் முன்னேற வேண்டும்.