அனுமதி மறுத்த கத்தார் ஏர்வேஸ் AI generated
இந்தியா

கைக்குழந்தைக்கு அனுமதி மறுத்த கத்தார் ஏர்வேஸ்: ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு!

Staff Writer

இத்தாலியில் வசிக்கும் இந்தியரின் 10 மாத கைக்குழந்தை, 6 வயது மகனுக்கு போர்டிங் பாஸ் வழங்கிய பிறகு, பயணம் செய்ய அனுமதி மறுத்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என கேரள நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ரோஷன் ஜோஸ், அவரின் மனைவி வினயா இருவரும் இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வெனிஸிலிருந்து கொச்சிக்கு விடுமுறைக்காக குடும்பத்துடன் வந்திருந்தனர்.

விடுமுறை முடிந்தபிறகு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் தம்பதியர் குழந்தைகளுடன் இத்தாலிக்குச் செல்ல கொச்சி விமான நிலையத்திற்குச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்யும் இடத்தில் இரண்டு மணி நேரக் காத்திருப்புக்கு பின்னர், விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர், அவர்களுடைய ஆறு வயது மகனுக்கு தனி விசா இல்லை என்று கூறி, போர்டிங் பாஸ் வழங்க கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்தது.

இதனால் வேறு வழியின்றி, மூத்த மகனை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, 10 மாத கைக்குழந்தையுடன் தம்பதியர் புறப்பட்டனர்.

மீண்டும் தோஹாவில், வெனிஸுக்கான இணைப்பு விமானத்தில் கைக்குழந்தையையும் அனுமதிக்க விமான நிறுவனம் மறுத்துவிட்டது.

பல மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு, அக்குழந்தை விமானத்தில் அனுமதிக்கப்படாது என்று விமான நிறுவன அதிகாரிகள் குடும்பத்தினரிடம் கூறினர்.

வினயா கட்டாயம் வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்ததால், அவர் தனியாக வெனிஸுக்கு புறப்பட்டார். ஜோஸ் குழந்தையுடன் கொச்சிக்குத் திரும்பினார்.

இதுகுறித்து ரோஷன் ஜோஸ் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த டி.ஆர்.பினு தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, ”வெனிஸிலிருந்து கொச்சிக்குப் பயணம் செய்வதற்குமுன், எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பயணம் செய்ய அனுமதித்த விமான நிறுவனம், தற்போது மறுப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளின் பயண ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று விமான நிறுவனம் கருதியிருந்தால், அவர்களை இத்தாலியிலிருந்து இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதித்திருக்கவோ திரும்பும் பயணத்திற்கான போர்டிங் பாஸ்களை வழங்கியிருக்கவோ கூடாது.” என்று கூறியது.

இது முற்றிலும் விமான நிலையத்தின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட தவறு என்று கூறிய நீதிமன்றம், மனஉளைச்சலுக்கு ஆளான குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையையும், வழக்கு நடத்த ஏற்பட்ட செலவுக்காக ரூ. 25,000யும், 45 நாள்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் குறிப்பிட்ட நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை, விமான நிறுவனம் செலுத்தவில்லை என்றால், புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இழப்பீட்டுத் தொகை வசூலாகும் வரை ஆண்டுக்கு 9 % வட்டி விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram