இந்தியா – நேபாளம் இடையே புதிய வாராந்திர ரயில் சேவை  
இந்தியா

இந்தியா – நேபாளம் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!

Staff Writer

இந்தியா – நேபாளம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் இன்று காணொலிவாயிலாகத் திறந்து வைத்தனர். 

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, நேபாளத்தின் ஜனக்பூர் இடையேயான சரயு – கம்லா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலின் சேவையை, இன்று இரு நாடுகளின் பிரதமர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தப் புதிய வாராந்திர ரயில் சேவை இராமாயணச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், 604 கி.மீ. கடக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயிலின் வழக்கமான பயணிகள் சேவை, வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியிலிருந்து திங்கள்கிழமைதோறும், மாலை 5.50 மணிக்குத் தொடங்கும் இந்த ரயில் 19 மணிநேர பயணத்திற்குப் பின்னர், அடுத்த நாள் மதியம் 12.40 மணிக்கு நேபாளத்தின் ஜனக்பூருக்குச் சென்றடைகிறது. இதேபோல, சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு ஜனக்பூரிலிருந்து தொடங்கும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 8.10 மணிக்கு அயோத்தியை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம் வழியாகச் செல்லும் இந்த ரயில், இரு முனையங்களைத் தவிர, மேலும் 10 முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசம், பீகார், நேபாளம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் வர்த்தகம், உள்ளூர் வணிகம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram