ரிதுபர்ணா 
இந்தியா

நீட் தேர்வில் தோற்றவருக்கு ஆண்டுக்கு 72.3 லட்சம் சம்பளம்!

ரூ. 72.3 லட்சம் சம்பளத்துடன் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவன வேலை

Staff Writer

நீட் தேர்வில் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவி ரோபோட்டிக்ஸ் துறையில் தன் முழுத்திறமையை வெளிக்கொண்டுவந்து ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 72.3 லட்சம் சம்பளத்துடன் பணிபுரிந்து வருகிறார்.

மாணவர்களில் அதிகம் பேர் ஒரு நுழைவுத்தேர்வு மட்டுமே நம் வாழ்க்கையையே தீர்மானிக்கும் என்று நினைக்கிறார்கள். அதில் ஏற்படும் தோல்வியினால் துவண்டு விடுகிறார்கள்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ரிதுபர்ணா மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் நுழைவுத்தேர்வை எழுதினார். அதில் அவருக்கு வாய்ப்பு தவறியது.

அந்தத் தேர்வு முடிவினால் துவண்டுபோகாத மாணவி, முற்றிலும் வித்தியாசமான ரோபோட்டிக்ஸ் துறையைத் தேர்வு செய்தார். அவர் சஹ்யாத்ரி பொறியியல்-மேலாண்மைக் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் - ஆட்டோமேஷன் படிப்பில் சேர்ந்தார்.

அங்கு அவர் புத்தகத்தில் படிப்பதை தினசரி வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, அதில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு கொண்டுவந்தார். உதாரணமாக பாக்கு விவசாயிகளுக்கு உதவும் ஒரு ரோபோட்டைத் தயார் செய்தார்.

தனது பொறியியல் படிப்பின் போது, ​​ரிதுபர்ணா ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் 8 மாத உள்ளகப் பயிற்சிக்காக இணைந்தார்.

அங்கு கல்லூரிப் பாடத்திட்டத்தைப் படித்துக்கொண்டே, இரவு நேரப் பணிகள் உட்பட நீண்ட நேரம் வேலை செய்து அவரது செயல்திறனை வளர்த்துக் கொண்டார்.

முதலில் ஆண்டுக்கு ரூ. 39.6 லட்சத்துடன் அவருக்கு ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அவரது திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 72.3 லட்சம் என்ற தொகையாக அவரது சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

டிசம்பர் 2024 முதல், அவர் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் ரோபோட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், கஸீபோ, பைதான், சி++ ஆகியவற்றைப் பயன்படுத்தி ரோபோட்டிக்ஸ் மென்பொருளை உருவாக்குகிறார்.

தொடக்கத்தில் சில நாள்கள், அவர் ட்ரீம் கிட் நிறுவனத்திலும் உள்ளகப் பயிற்சி பெற்றார். அங்கு அவர் 3D கேம் கதாபாத்திரங்களை உருவாக்கினார். 

ஒரு தேர்வு நம் வாழ்க்கையைத் தீர்மானிக்காது என்பதற்கு சிறந்த உதாரணம், ரிதுபர்ணா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram