ஒவ்வொரு மகர சங்கராந்திக்கும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6, 11 என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நவ.14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நவ. 18ஆம் தேதி நாங்கள் பதவியேற்போம். இம்முறை பிகாரில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேரோடு பிடுங்கி எறியப்படும்.
நாங்கள் ஏற்கெனவே பெண்களுக்காக அறிவித்த திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் அதிக அளவில் வரவேற்றுள்ளனர். வரும் ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை வர இருக்கிறது. இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக நாங்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் மகர சங்கராந்தியின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நமது பெண்கள் ரூ.1.5 லட்சம் நிதி உதவி பெறுவார்கள். பணவீக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியுதவி அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
பீகாரை கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கம். இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் அமைந்த உடன், விவசாய பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடுதலாக முறையே ரூ.300 மற்றும் ரூ. 400 வழங்கப்படும். அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் 70 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.
பிஹார் முழுவதும் நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறோம். முதல்கட்டத் தேர்தல் பிரச்சாரத்துக்கான கடைசி நாள் இது. மக்கள் மாற்றத்துக்கான மனநிலையில் இருக்கிறார்கள். இந்த முறை பிஹாரில் 20 ஆண்டுகளாக இருக்கும் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்.” என தெரிவித்தார்