மக்களவை 
இந்தியா

நமது எம்பிக்களுக்கு  24%  ஊதிய உயர்வு!  இப்போது அவர்கள் பெறும் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா?

அரசியல் செய்தியாளர்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2025 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி உறுப்பினர்களின் மாத ஊதியம் 1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு பின் தேதியிட்டு ஏப்ரல் 1, 2023 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும். இதற்கு முன்னதாக 2018-இல் கடைசியாக எம்பிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் படி எம்பிகளின் சம்பள விவரம் பின்வருமாறு:

மாத சம்பளம்: 1,24,000 ரூ

தினப்படி: 2500 ரூ

தொகுதிப்படி: 87000 ரூ

மாதாந்திர அலுவலகச் செலவுகள் படி :

கணினி ஊழியர் சம்பளம்: 50,000 ரூ

எழுது பொருட்கள்: 25,000 ரூ

மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சரவை  இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி நமது எம்பிகளுக்கு சம்பளம் 24% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்ச ரூபாயாக இருந்தது 1,24,000 ரூபாய் ஆகி உள்ளது. அவர்களின் ஓய்வூதியமும் 25% உயர்த்தப்பட்டு 25000 த்தில் இருந்து மாதம் 31,000 ரூ ஆகி உள்ளது.

அவர்களின் தினசரிப் படியும் 25% உயர்த்தப்பட்டு 2000த்தில் இருந்து 2500 ரூபாய் ஆகி உள்ளது.

இந்தியர்களின் சராசரி மாத சம்பளம் 15000 ரூபாய் ஆகும். அதிலிருந்து பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இதைவிட எட்டு மடங்கும் அதிகமாகும்.

இந்த சம்பள உயர்வு 1961 ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிட்டு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: 1948 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளமாக தினந்தோறும் 45 ரூபாய் வழங்கப்பட்டது. 1949-இல் அவர்களே முன்வந்து அதை 40 ஆக குறைத்துக்கொண்டார்கள்.  1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி மாத சம்பளமாக 300 ரூபாய் வழங்கப்பட்டது.