இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் 
இந்தியா

தேர்தல் பத்திர விவரத்தைத் தாக்கல் செய்தது ஸ்டேட் வங்கி!

Staff Writer

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்ற விவரம் அனைத்தையும் ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் இன்று மாலை தாக்கல் செய்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்ற விவரத்தை தலைமை தேர்தல் ஆணையத்திடம் இந்தியன் ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

ஆனால் அதற்கு உடனடியாக ஒப்புக் கொள்ளாத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை என கோரிக்கை வைத்தது. அதை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, மார்ச் பன்னிரண்டாம் தேதி அதாவது இன்று மாலைக்குள் ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

வேறு வழி இன்றி ஸ்டேட் வங்கி நிர்வாகம் இன்று மாலை தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது.

ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வரும் 15ஆம் தேதிக்குள் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.