இந்தியாவில் 5 கோடி குழந்தைகளுக்கு பள்ளியில் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று சர்வேதச அமைப்புகளின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 24 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமும் கூறியுள்ளது.
மேலும், உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கும் 5 குழந்தைகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில், இந்த சுகாதார வசதியின்மை 4% குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் குடிநீர் வசதி இல்லாமல் தவிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை குடிநீர் வசதி வழங்கும் இலக்கை நோக்கி முன்னேறும் 62 நாடுகளில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் சற்றே ஆறுதல் அளிக்கிறது.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நைஜீரியாவில் 3 கோடியே 40 லட்சம் குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 2 கோடியே 60 லட்சம் குழந்தைகளும் அடிப்படை வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது உலகநாடுகள் முன்னேற்றத்திற்கு எடுத்துவரும் முயற்சியைவிட அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை குடிநீர் வசதி கிடைக்க 4 மடங்கு வேகமாக பணிகளை நடத்த வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய வேகமே தொடர்ந்தால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் 84% பள்ளிகளுக்கு மட்டுமே அடிப்படை குடிநீர் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.