கூகுள் மேப்பில் அகிலாபாத் ஹன்ஸ்பூர்  
இந்தியா

எழுத்துப் பிழையால் ஒரு கிராமத்தை தவிக்கவிடும் கூகுள் மேப்!

Staff Writer

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் பெயரை கூகுள் மேப் தவறாக பதிவிட்டதால், எந்த ஒரு அரசு சார்ந்த ஆவணங்களையும் பெற முடியாமல் அந்தக் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கூகுள் மேப்பில் ஏற்பட்ட சிறிய எழுத்துப்பிழையால், இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அரசின் முக்கிய ஆவணங்கள், நலத்திட்டங்கள், அரசு சலுகைகள் ஆகியவற்றைப் பெற முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

தற்போதைய அரசு சார்ந்த இணையதளங்கள் அனைத்திலும் முகவரியை தானாகவே எடுத்துக்கொள்ளும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த கிராமத்தின் சரியானப் பெயரை உள்ளீடு செய்தால் இணையதளங்கள் ஏற்க மறுக்கின்றன. இதனால், அந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அரசு வருவாய் பதிவேடுகளில் அதிகாரப்பூர்வமாக அகலாபாத் ஹன்ஸ்பூர் என்று இந்த கிராமம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் இதை அகிலாபாத் ஹன்ஸ்பூர் என்று காட்டுகிறது.

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியாமல் அவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழைப் பெற முடியாததால் ஓய்வூதியம், வாரிசுரிமைத் தீர்ப்புகள், காப்பீடு தொகை பெறுவது ஆகியவை நிலுவையில் உள்ளது.

மேலும், வேலைத்தேடுபவர்களால், இணையதளத்தில் தன் முகவரி சரிபார்ப்பை முடிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த தவறை சரிசெய்யுமாறு கூகுளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram