இந்தியா

ஆந்திரக் கடற்கரை அருகே கரையைக் கடக்கிறது 'அக்வான்' புயல்!

Staff Writer

வங்கக்கடலில் உருவாகவுள்ள அக்வான் புயல் ஆந்திரப்பிரதேசத்தில் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

"தென்கிழக்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வடக்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் வலுவடைந்து, மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர், துனி இடையே ஆந்திரப்பிரதேசக் கடற்கரையை மிகத் தீவிர புயலாகக் கடக்கக்கூடும்.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக, வரும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னல், மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்." என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram