டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன் நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது.
அவர்தான் தற்கொலை படை தாக்குதலை நடத்தி உள்ளார். இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை அவருக்கு வாங்கிக் கொடுத்த காஷ்மீரை சேர்ந்த அமீர் ரசித் அலி என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு தாக்குதலை நடத்திய உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், “தற்கொலை பற்றி அனைவராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுவெடிப்புக்கு எதிராக பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்று முன்பே தெரிந்தும் அந்தக் காரியத்தைச் செய்வதால் அதைத் தியாகச் செயல்தான் என்று சொல்ல வேண்டும். அதனால், மரணத்திற்கு அஞ்சாதீர்கள்” என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.