உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்தது. 
இந்தியா

' யார்யா நீங்க எல்லாம்...?' ஆர்டிஐ செயல்பாட்டாளரை வெளுத்துவிட்ட உச்சநீதிமன்றம்!

Staff Writer

சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியரை, வேலை செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆர்டி ஐ செயல்பாட்டாளர் ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தற்போது ஒரு புது தொழிலாக மாறி வருகிறது என்றும், சாலை கட்டுமானப் பணிகளை கண்காணிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது எனவும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டம், படாலாவில் சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஆர்டிஐ செயல்பாட்டாளரான ராகேஷ் குமார் பெஹல், ராஜீவ் குமார் ஆகியோர் இணைந்து இந்த பணியை தடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர், தொழிலாளர்களை இழிவாகப் பேசி காயம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், அரசுப் பணி நடைபெறுவதில் இடையூறு செய்ததால், அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

தனக்கு முன்ஜாமீன் மறுத்த பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பெஹல் எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

அப்போது, ஆர்டிஐ செயல்பாட்டாளரான ராகேஷ் குமார் பெஹல், சாலை கட்டுமானப் பணியில் நடந்த ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியதால், அவர்கள் மீது பொய்யாகச் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி மேத்தா, "மத்திய அரசு சாலையை அமைப்பதற்கு நிதியை வழங்கியுள்ளது; அது அந்தப் பணியைக் கவனித்துக் கொள்ளும். நீங்கள் யார் அதில் தலையிடுவதற்கு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு புதிய தொழில் ஆகிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எனப்படுபவர், கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பொய்யான செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள். ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது." என்று கூறினார்.

நீதிபதி மேத்தாவின் கருத்துகளை ஆமோதித்த நீதிபதி பிஷ்னோய், "இந்தச் சாலைகளின் கட்டுமானத்தை மேற்பார்வையிட நீங்கள் யார்? நீங்கள் ஏதேனும் உயர் அதிகாரியா ?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்டிஐ செயல்பாட்டாளருக்கும், அவரது உதவியாளருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram