உணவுப் பொட்டலங்களில் எச்சரிக்கை குறியீடு இருக்க வேண்டும் 
இந்தியா

3 எச்சரிக்கைக் குறியீடுகள் - இனி உணவுப் பாக்கெட்டுகளில் கட்டாயம்!

ம.தினோவிகா

கடைகளில் விற்பனையாகும் உணவுப் பாக்கெட்டுகளில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு எனத் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பொட்டலத்தின் முன்பக்கத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளின் அளவை நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாகக் குறிப்பிடும் முறையைக் கட்டாயமாக்க மாநில, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்தரன் அமர்வு நடத்தியது. அதில் இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் விவரம் :

"1) உணவுப் பொட்டலத்தில் முக்கிய ஊட்டச்சத்துகளின் அளவை நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக ஒரேயொரு அறுகோணத்தில் மட்டும் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும் தனித்தனி அறுகோணம் இருக்க வேண்டும். அவற்றில், 'அதிக கொழுப்பு', 'அதிக உப்பு', 'அதிக சர்க்கரை' ஆகிய வார்த்தைகளுடன் அவற்றுக்குரிய சித்திரங்களும் முறையே இடம் பெற்றிருக்க வேண்டும்.

'மொத்த சர்க்கரை', 'நிறைவுற்ற கொழுப்பு' ஆகியவற்றை குறிப்பிட உத்தரவு

2) 'சேர்க்கப்பட்ட கொழுப்பு', 'சேர்க்கப்பட்ட சர்க்கரை' ஆகியவற்றுக்குப் பதிலாக 'மொத்த சர்க்கரை', 'நிறைவுற்ற கொழுப்பு' ஆகியவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

3) இந்த எச்சரிக்கைக் குறியீடுகள், நுகர்வோருக்கு எளிதில் தெரியும் வகையில், மொத்த முகப்புப் பரப்பில் 4% முதல் 5% வரை இடம்பெற வேண்டும்.

4) நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவைவிடக் குறைவாக உள்ள இனிப்பூட்டப்பட்ட பானங்களில், எச்சரிக்கை லேபிளைப் போலவே தோற்றமளிக்கும் குழப்பமான குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடாது.

5) இந்தப் புதிய விதிகளை இறுதிசெய்து செயல்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையத்துக்கு 4 மாத கால அவகாசம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து, உணவு, குளிர்பான நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜிங்கை மாற்ற ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும்." என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram