தனிச்சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி போக்ஸோ குற்றவாளியை விடுவித்த உச்சநீதிமன்றம். 
இந்தியா

போக்ஸோ குற்றவாளிக்கு விடுதலை! தனிச்சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

Staff Writer

உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின் மீது சரியான நீதியை நிலைநாட்ட இந்திய அரசியலமைப்பின் 142ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி போக்ஸோ குற்றவாளியை விடுவித்துள்ளது.

சமரசத்தினால் திருமண வயதை அடைந்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் அவர்கள் நிம்மதியாக வாழ இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலித்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மறுத்ததால், அவர் மீது புகார் தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருதுபாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், திருமண வயதை எட்டாத பெண்ணுடன் உறவு வைத்திருந்ததால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்து, அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த வழக்கைப் பற்றி அறிந்த அந்நபர் திருமணம் ஆன மூன்றாம் நாளே விட்டுச் சென்றுள்ளார். இதனையறிந்து, அப்போது பெயிலில் வந்திருந்த மருதுபாண்டி திருமண வயதை அடைந்த அப்பெண்ணிடம் சமரசம் பேசி திருமணம் செய்து வாழத்தொடங்கினார்.

இதன்பிறகு, வழக்கு தொடர்ந்திருந்த அப்பெண், உயர்நீதிமன்றத்தை நாடியபோது, உயர்நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்ததால், உச்சநீதிமன்றத்தை அப்பெண் நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, சந்துருக்கர் கூறியதாவது :

“இந்த வழக்கின் குறிப்பிட்ட தகவல்களை வைத்து, இந்திய அரசியலமைப்பின் 142ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தனது அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி போக்ஸோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட மருதுபாண்டி தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக சமுதாயத்தில் வாழ இந்த நீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பளிக்கிறது. மேலும், இந்த வழக்கின் குறிப்பிட்ட தகவல்களை கொண்டு மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த காரணங்களுக்காகவும் இந்த தீர்ப்பை பயன்படுத்தக்கூடாது.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாதாரண சட்டங்கள் மூலமாக தீர்வு காண முடியாத சிக்கலான வழக்குகளிலும், சட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி வழங்க 142ஆவது சட்டப்பிரிவு, உச்ச நீதிமன்றத்தால் பயன்படுத்தப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram