ஆசியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், 36 ஆண்டுகள் பணியை முடித்து இந்த மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். ஐதராபாத் - மும்பை இராஜதானி அதிவிரைவுத் தொடர்வண்டியை இயக்கி முடித்தபிறகு, நேற்று அவருக்கு சிறப்பான பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
மும்பையில் சக ஊழியர்களும் பயணிகளும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அவரைச் சுற்றிலும் நின்று நடனமாடி மகிழ்வித்தனர்.
1989ஆம் ஆண்டில் உதவி ஓட்டுநராகப் பணியில் சேர்ந்த இவர், ஏழு ஆண்டுகளில் சரக்கு இரயில்வண்டியை இயக்கத் தொடங்கினார்.
கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து பயணிகள் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.
வந்தே பாரத் இரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் இரயில் ஓட்டுநர்கள் உருவாக, இவரும் ஓர் உந்துசக்தியாக இருந்துவருகிறார்.
இவரின் ஓய்வைப் பற்றி மத்திய இரயில்வே வெளியிட்டுள்ள குறிப்பில், ” உண்மையான ஒரு முன்னோடியாக சுரேகா விளங்குகிறார். தனக்கு முன்னால் வந்த அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்துள்ளார். எத்தனையோ பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். எந்தக் கனவும் எட்ட முடியாதது அல்ல என்பதை நிரூபித்தவர் இவர். இந்திய ரயில்வேயில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் அடையாளமாக சுரேகாவின் பணிப் பயணம் என்றென்றும் நிலைத்து இருக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.