உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பிஆர் கவாய் பதவிக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவும் கலந்து கொண்டனர்.
யார் இந்த சூர்யகாந்த்?
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் 1962 பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்தவர் சூர்யகாந்த். மகரிஷி தயானந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பயின்ற இவர், தன்னுடைய 38ஆவது வயதிலேயே அரியானா அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 2001இல் மூத்த வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட இவர், 2004இல் அரியானா பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீதிபதியாக 14 ஆண்டுகள் பணியாற்றி இவர், கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
இன்று உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சூர்யகாந்த், 2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.