தற்போதைய தலைவர் சந்திரசேகரன் 
இந்தியா

வேற ஆளைப் போட்டுக்கங்க... பதவிவிலகும் டாடா தலைவர் சந்திரசேகரன்!

Staff Writer

டாடா சன்ஸ் குழுமத்தின் தற்போதைய தலைவர் சந்திரசேகரனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-உடன் முடிவடையும் நிலையில், அதற்குப் பிறகு இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பது குறித்த முடிவு எட்டப்படாததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தில் 1987ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு, டி.சி.எஸ்.-ன் தலைமை நிர்வாகியானார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்தப் பதவி விலகல் குறித்து அவர் கூறியதாவது:

“ எனது வாழ்வில், 40 ஆண்டுகாலமாக டாடா குழுமத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக, டாடா சன்ஸ் குழுமத்தை வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தற்போது நான் வகித்துவரும் டாடா குழுமத்தின் தலைவர் பதவி 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனால், சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் , எனது பதவிக்காலத்தை ஐந்து ஆண்டு காலம் நீட்டிக்க டாடா சன்ஸ் நியமனக் குழுவிற்கு ஒருமனதாகப் பரிந்துரைத்தனர்.

இதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, டாடா சன்ஸ் வாரியத்திடம் எனது பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து முன்வைக்கப்பட்டது. அப்போது, வாரியக் குழு உறுப்பினர் ஒருவர், முன்வைக்கப்பட்ட முடிவிற்கு மறுப்பு தெரிவித்ததால், இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வாரியக் கூட்டம் முடிந்து ஆறு மாதம் நிறைவடைந்த பிறகும், எனது பதவி நீட்டிப்பு குறித்த முடிவு எட்டப்படவில்லை.

டாடா சன்ஸ் குழுமம் மிகப்பெரிய குழுமம். மேலும், நிறைய முக்கியமான திட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கட்டத்தில் உள்ளன. இதனால், பிப்ரவரி 2027க்குப் பிறகு தலைமை பொறுப்பை வகிக்கப்போவது யார் என்ற தெளிவு ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் உட்பட அனைவருக்கும் தேவை.

இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, வரும் 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு எனது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளதாக, டாடா சன்ஸ் குழுவின் வாரியத்திடம் முன்னதாகவே தெரிவித்துள்ளேன். மேலும், இந்தப் பொறுப்பிற்கேற்ற அடுத்த தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று சந்திரசேகரன் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram