கடந்த மே-3ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே டெலிகிராம் செயலியில் கசிந்ததால், மறுதேர்வு முடியும் வரை இந்த செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வு, நாடு முழுதும் கடந்த மே-3ஆம் தேதி நடந்தது. இதை 22 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், ராஜஸ்தான், பீகார் உட்பட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததால், தேசிய தேர்வு முகமை அத்தேர்வை ரத்து செய்தது.
நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21 அன்று நடக்கவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் இணைய வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக இன்று முதல் ஜூன் 21 வரை தடை செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், ஜூன் 30-ம் தேதி வரை டெலிகிராம் செயலியில் ஏற்கெனவே பதிவிட்ட குறுஞ்செய்திகளைத் திருத்தும் 'மெசேஜ் எடிட்டிங்' வசதியும் முடக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், புதிய செய்திகளை அனுப்புவதில் எவ்விதச் சிக்கலும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.