பேருந்து விபத்து 
இந்தியா

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் பலி!

Staff Writer

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மீது மோதியதில் பேருந்தின் முன் பகுதி முழுமையாக சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், 3 மாத குழந்தை உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி தவறான திசையில் வந்துள்ளது. இது அதிவேகமாக சென்று பேருந்து மீது மோதியதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைவாக சென்று போதிய மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.