மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும், பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்த அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், அவரைப் பற்றிய சில குறிப்புகள்…
1959 ஜூலை 22 அன்று அகமதுநகர் மாவட்டம், தியோலலி பிரவராவில் பிறந்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார். பள்ளிப் படிப்பை தியோலியில் முடித்த இவர், தந்தையின் அகால மரணம் காரணமாக தனது பட்டப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு குடும்பப் பொறுப்புகளை ஏற்றார்.
1982 ஆம் ஆண்டில் கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலையின் வாரியத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அஜித் பவாரின் அரசியல் பயணம் தொடங்கியது. கூட்டுறவுத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர், 1991 இல் புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் 16 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.
பாராமதி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித் பவார், பின்னர் தனது சித்தப்பா சரத் பவார் மத்திய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்க வசதியாக தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, சரத் பவார் ராஜினா செய்த பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினரானார்.
மகாராஷ்டிராவின் வேளாண்மை மற்றும் மின் துறை அமைச்சராக (ஜூன் 1991 – நவம்பர் 1992) பணியாற்றினார். பின்னர் மண்வளப் பாதுகாப்பு, மின் மற்றும் திட்டமிடல் துறைக்கான அமைச்சரானார். 1999 இல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, நீர்ப்பாசனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2019ஆம் ஆண்டு பாஜக ஆதரவுடன் திடீரென துணை முதல்வரானார் அஜித் பவார். ஆனால் 80 மணி நேரம் மட்டுமே இந்த பதவியில் இருந்தார்.
2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆ தேதி சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு பிரிவினர், அஜித் பவார் தலைமையில் பிரிந்து சென்று, “தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)” என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணியில் இணைந்த அஜித் பவார், மீண்டும் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
பாராமதி மக்களவை தொகுதியில் 1991, 1996, 1999 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
பாராமதி சட்டப்பேரவை தொகுதியில் 2004, 2009, 2014, 2019, 2024 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களின் ஒருவரான சரத்பவாரின் தேசியவாத கட்சியை அவரது சொந்த அண்ணன் மகனே கபளீகரம் செய்தது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது.
அண்மையில் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பகைமை மறந்து சித்தப்பா சரத்பவார் கட்சியுடன் இணைந்து பல இடங்களில் அஜித்பவார் பிரிவு போட்டியிட்டது. இதனால் இரு கட்சிகளும் ஒன்றாக இணையக் கூடிய வாய்ப்பும் இருந்தது.
இந்நிலையில் மும்பையில் இருந்து சரத்பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் பாராமதிக்கு சென்ற போது அஜித் பவார், பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அஜித் பவார் உட்பட 5 பேர் பலியாகி உள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.