வணிக சிலிண்டர் 
இந்தியா

மாநிலங்களுக்கான வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு!

Staff Writer

மாநிலங்களுக்கான வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைண் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள் இந்தியா புறப்படுவதற்கான சிக்னல்கள் கிடைத்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக போர் காரணமாக 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர் ஒதுக்கீடு, மார்ச் 23 (நாளை) முதல் 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வணிக சிலிண்டர் சப்ளையில் உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலை உணவகங்கள், தொழில் நிறுவன கேண்டீன்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஒதுக்கீடு பெற விரும்பும் வணிக நுகர்வோர் எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.1,928-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் விலை, தற்போது ரூ.115.50 உயர்ந்து ரூ.2,043.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கடும் தட்டுப்பாடு நிலவுவதால் சில இடங்களில் ஒரு சிலிண்டர் ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசின் இந்த புதிய 50% ஒதுக்கீடு அறிவிப்பு, நாளை முதல் அமலுக்கு வருவதால் வரும் நாட்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது என வணிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.