இந்தியா

சாரட் வண்டியில் நாடாளுமன்றம் வந்த குடியரசுத் தலைவர்!

Staff Writer

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்தார்.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உரையாற்றவிருக்கிறார். அவரது உரையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது. வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நாளை பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும். தோ்தல் நடைபெறுவதால், குடியரசுத் தலைவா் உரையும் இடைக்கால பட்ஜெட்டும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறைவான நாள்களே நடைபெறும் இக்கூட்டத்தொடரை ஆக்கபூா்வமாகவும் சுமுகமாகவும் நடத்துவதற்காக, மத்திய அரசின் அழைப்பின்பேரில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.