இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும், பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இந்த போரின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையினருடன் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போர்க் கப்பலை அமெரிக்கா நேற்று தாக்கியது.
இதில், 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் கடற்படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”உலகமே நிலையற்ற கட்டத்துக்கு நுழைந்துள்ளது. கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது.
இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது இறக்குமதியில் 40 சதவீதம் ஹார்முஸ் நீர்வழிப் பாதை வழியாகவே வருகின்றன. எல்பிஜி மற்றும் எல்என்ஜி நிலைமையும் மோசமாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்துள்ளது. ஆனால், பிரதமர் இதுவரை வாய் திறக்கவில்லை.
இதுபோன்ற சூழலில் நமக்கு ஒரு நிலையான தலைவரே தேவை. ஆனால், அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக் கொடுத்த சமரசப் பிரதமரை நாம் கொண்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.