மனித உடலின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்று கொட்டாவி விடுவது. ஆனால் அது கூட பிரச்சனையாக மாறும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கன்னியாகுமரி -அசாம் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளைஞர் பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது உடல் அசதி காரணமாக கொட்டாவி விட்டுள்ளார். ஆனால் அதன் பின் அவரால் வாயை மூடவே முடியவில்லை. மீண்டும் இயல்பு நிலைக்கு வாயை கொண்டு வர முயற்சிக்கையில் கடுமையாக வலியால் அவதியுற்றார். அவரால் தனது பிரச்சனையை சொல்லக்கூட முடியாமல் திண்டாடினார்.
இதைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக சிகிச்சை அளித்தார். அதன்பிறகு இளைஞரின் வாய் இயல்பு நிலைக்கு வந்தது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில், ”கொட்டாவி விட்ட பிறகு மீண்டும் வாய் மூட இயலாத பிரச்சனைக்கு டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் என்று பெயர். பொதுவாக கீழ்தாடை எலும்பின் பந்து பூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலைதான் இது. இதனால் வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும்.
பொதுவாக அதிகமாக கொட்டாவி விடும் போதும், விபத்து அல்லது சில நோய்களால் கூட இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெறும் போது இயல்பு நிலைக்கு மாறும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட தேவைப்பட வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.