ரயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கி.மீக்கு மேல் கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் ரயில் டிக்கெட் கட்டணமானது வருகிற டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
புறநகர் ரயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை என ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.